நினைக்க மறந்த நிமிடங்கள் | சென்னை மீம்ஸ்

0
2454


அப்பொழுது தான் மெல்ல கண் விழித்தேன் . அனு நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். ஹரிணியும் தான் . மழை மேகம் ஒரு விதமான ரம்மியமான சூழலை ஏற்படுத்தி கொண்டிருந்தது . மெதுவாக சத்தம் ஏற்படுத்தாமல் பெட்ரூமிலிருந்து வெளியே வந்து டிவியின் அருகில் இருந்த காலண்டரை கிழிக்க முற்பட்டபோது தான் கவனித்தேன் , எனக்கும் அனுவுக்கும் திருமணம் ஆகி எழு ஆண்டுகள் ஆகின்றது என்பதை . அப்பாவுக்கு வயாசாகிவிட்டதை என் மகளும் இந்த நாட்காட்டியும் தான் அடிக்கடி உணர்த்தி கொண்டிருக்கிறார்கள் !

மெலிதாக மனதிற்குள் புன்னகைத்து கொண்டே வெளியே வந்து பார்த்த பொழுது மழை தூறி கொண்டிருந்தது . இந்த நொடியில் ஒரு ஸ்ட்ராங்கான காபி குடித்தால் நன்றாக இருக்குமென நினைத்து அனுவுவை எழுப்ப பெட்ரூம் உள்ளே சென்றபோது , ஹரிணி தன் அம்மாவை நன்றாக கட்டிப்பிடித்து தூங்கி கொண்டிருந்தாள் . அந்த அழகை ரசித்துக்கொண்டே நானே கிச்சனுக்குள் சென்று பாலை கொதிக்க வைத்துவிட்டு எதையோ யோசித்து கொண்டிருந்த போது, என் ஐந்து வயது மகள் ஹரிணி அந்த முயல் பொம்மை செருப்பு போட்டு கொண்டு கண்ணை கசக்கியபடி வந்தாள். அவள் சுருள் முடி மேலும் சுருண்டு அழாகாக இருந்தது . மெதுவாக வந்து ஏதும் பேசாமல் என் காலை கட்டி கொண்டாள்.

“ என்னடா செல்லம் … எழுந்திட்டிங்களா ??…. பால் குடிக்கிறியாடி ஹரிணி பாப்பா ? “

“……………….”

“ என்ன செல்லம் ?? அப்பா மேல கோபமா ?? “

“ ம்ம்ம்… ஆமா ..” என்றாள் கோபத்துடன் . அந்த கோபத்திலும் ஒரு அழகு இருந்தது . என் பொண்ணுல…!!

“ ஏன்டா ?? “ என அவளை தூக்கினேன் .

“ இன்னிக்கு அம்மாக்கு பர்த்டே… நீ மறந்துட்ட…” என திக்கி திக்கி மழலை மொழியில் சொன்னாள் என் குட்டி தேவதை . இன்னும் ஞாபகம் இருக்கிறது அனுவின் முதல் பிறந்த நாளுக்கு என்ன செய்தேன் என்று . பசுமையான நினைவுகள் மட்டுமே ஓடி கொண்டிருந்த வேளையில் பால் பொங்கி வழிய ஆரம்பித்ததும் ஆப் செய்து நானும் என் குட்டி தேவதையும் ஒரு திட்டம் தீட்டினோம் !!

காபி போட்டு அழாகாக அலங்கரிக்க பட்ட தட்டில் வைத்து மூடி ஹரிணியிடம் கொடுத்துவிட்டேன் . அந்த தட்டில் மேலும் ஒரு சுருட்டப் பட்ட அட்டையில் ரிப்பன் கட்டப்பட்டிருந்தது . அது ஹரிணியின் கிப்டாம் அம்மாவுக்கு !! நான் எல்லாம் முடித்தபடி அனுவின் ரியாக்ஷனை கவனிக்க கிச்சனின் சுவற்றின் ஓரமாய் ஒற்றை கண் பார்வையாய் பார்த்தேன் .

மெதுவாக அந்த தட்டை பெட் மேல வைத்து விட்டு அம்மாவை எழுப்பினாள் ஹரிணி . பொறுமையாக கண்விழித்து எழுந்து ஹரிணி நெற்றியில் முத்தமிட்டாள் அனு.

“ அம்மா காபி…..”

“ தேங்க்ஸ் டா …” என அந்த அட்டையை பிரித்து பார்த்து புன்னகைத்தாள். அதில் ஹரிணி , அம்மாவை வரைந்து “ ஹாப்பி பர்த்டே மம்மி “ என்று தப்பான ஆங்கிலத்தில் அழகாக எழுதி இருந்தாள்.

காபி மேல மூட பட்டிருந்த தட்டை எடுத்து பார்த்த போது, அந்த காபி நுரையில் ஒரு ஹார்டின் ஷேப் என்னால் வடிவமைக்கப்பட்டிருந்தது. மீண்டும் புன்னைகைத்து கொண்டே கண்ணீரை லேசாக துடைத்து ஹரிணிக்கு முத்தம் கொடுத்தாள். இதையெல்லாம் நான் என் ஒற்றை கண்ணால் ரசித்த பின், என் கோப்பை மெதுவாக என் அருகில் அவள் கோப்பையுடன் வந்து இடைவெளி விட்டு அமர்ந்தாள். எதுவும் பேசவில்லை இருவரும் . பின் அவளே ஆரம்பித்தாள்.

“ அந்த மழை எவ்வளவு அழகா இருக்குல …?? “

காபியை உறிஞ்சிக்கொண்டே இல்லை என்பதுபோல் தலையை ஆட்டினேன்.

ஒரு மாதிரி என்னை பார்த்தாள் . மெல்ல அவளை பார்க்காமல் சிரித்தேன் .

“ அந்த பூ எவ்வளவு அழகா இருக்குல …?? “

 மீண்டும் இல்லை என்பது போல் தலையை ஆட்டினேன்.

“ ச்ச… உன் கண்ணுக்கு எது தான் அழகா தெரியுமோ …?? “ என சலித்து கொண்டு காபியை உறிந்தாள்.

நான் மெதுவாக என் கோப்பையையும் அவள் கோப்பையையும் ஒரு சேர ஓரமாக வைத்து அவள் அருகே சென்று கண்களை
பார்த்து சொன்னேன்

“ நீ அழகு… ஹரிணி அழகு … நம்ம காதல் அழகு … வேற எதுவும் எனக்கு பெருசா தெரியல !! … “ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனு “ என்றேன்

வெட்கத்திலும் சந்தோஷத்திலும் அவளுக்கு கண்ணீர் வந்தது. மெதுவாக அவள் உதடுகளை ஈரப்படுத்த நான் நெருங்கியபோது………

“ அப்பா… நான் பார்த்துட்டேன் ….” என வீடே அதிரும்படி ஹரிணி ஒளிந்திருந்து சிரித்த போது நானும் அனுவும் வெட்கப்பட்டு வேகமாக அவளை பிடிக்க ஓடினோம். ஆனால் அங்கே ஓரமாய் ஒன்று சேர்த்து வைக்கப்பட்டிருந்த காபி கோப்பைகள் மட்டும் முத்தமிட்டு கொண்டிருந்தன மழையில் ! 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சில சமயம் நமது வாழ்கையின் அருகாமையில் இருக்கும் சிலிர்ப்பான, அன்பான தருணங்களை சேகரிக்க மறந்து, இயந்திரத்தனமான இவ்வுலகில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் சிந்தித்து வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களுக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால் , என்றும் இனிமை தான் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here